சென்னையில் அதிநவீன ட்ரோன் போலீஸ் பிரிவு உள்ள நிலையில், புயல் பாதிப்பின் போது குறித்த காலத்தில் களமிறங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் தான் நாட்டின் முதல் ட்ரோன் போலீஸ் பிரிவு அமைக்கப்பட்டது. சுமார் 3.6 கோடி கடந்த 2023ஆம் ஆண்டு அந்த பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது. அரசாங்கத்தின் பேரிடர் மேலாண்மையில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் ஐயமில்லை.
கடந்த காலங்களில், வெட்டுக்கிளிகளை அழிப்பதற்காக ட்ரோன்கள் மூலம் ரசாயனம் தெளிக்கப்பட்டது. அதேபோல், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணையில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகித்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில், ட்ரோன்கள் பெரிய கூட்டங்களைக் கண்காணிப்பதற்கும், தீவிரவாத செயல்களை தடுக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இதேபோல், கோவிட் தொற்றின் போது கிருமிநாசினிகளை தெளிப்பதற்காக ட்ரோன்களைப் பயன்படுத்தலாம் என்பதை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நிரூபித்தது.
ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. அரிசி, பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். வெள்ள மீட்பு நடவடிக்கையில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினார்.
அதனை மெய்பிக்கும் வகையில் வெள்ள பாதிப்பு பணிகளுக்காக டிசம்பர் 9ஆம் தேதி முதல் ட்ரோன்கள் பயன்படுத்த தமிழக அரசு தொடங்கியது. இதனை தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜாவும் தனது எக்ஸ் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது புயல் தாக்கிய 4 நாட்களுக்கு பிறகு ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
#Drones have been pressed into action to get vital incidental #data which will be used to tackle pending issues, help in clean up work and MORE IMPORTANTLY to use in the future to mitigate repetition of present issues.#ChennaiRains pic.twitter.com/q3tBdKUgM5
— Dr. T R B Rajaa (@TRBRajaa) December 8, 2023
அப்போது பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடிய தொடங்கி இருந்தது. பல நவீன வசதிகள் இருந்தும் தமிழக அரசு முன்னேற்பாடு பணிகளில் கவனம் செலுத்தவில்லை என்பதை தான் இது காட்டுகிறது.
இந்த ட்ரோன்களை குறித்த காலத்தில் பயன்படுத்தி இருந்தால் வெள்ள நிலைமையை கண்காணித்தல், நகரின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை வரைபடமாக்குதல், அவசரகால அறிவிப்புகளை வழங்குதல் போன்ற பணிகளை செய்திருக்கலாம்.
அரசாங்கத்தால் நடத்தப்படும் ட்ரோன் கார்ப்பரேஷனைத் தவிர, சென்னையில் பல ஆளில்லா ட்ரோன் நிறுவனங்களும் உள்ளன. ஐஐடி மெட்ராஸ் மற்றும் முன்னணி பொறியியல் கல்லூரிகளுடன் தொடர்புடைய ட்ரோன் குழுக்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களும் உள்ளன, அவை இந்தியா முழுவதும் பல்வேறு பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் மூலம் தங்கள் திறமையை நிரூபித்துள்ளன.
ஆனால் இதனையும் பயன்படுத்தாமல் வரலாறு காணாத மழை, வெள்ள நீர் வடிந்துவிட்டது போன்று யாரும் நம்ப முடியாத செய்திகளை தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.