டி20 உலகக்கோப்பைக்கான லோகோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணி தோல்வியடைந்தாலும் டி20 தொடரில் இந்தியா வெற்றி வாகை சூடும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதன்படி, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கும், ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அமெரிக்காவில் மக்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆர்வத்தை அதிகரிக்க இந்த முறை அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றன.
இதுபோல் கனடா, ஆசியக் கண்டத்திலிருந்து நேபாளம், ஓமன், கிழக்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து பப்புவா நியூ கினியா, ஐரோப்பாவிலிருந்து அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து நமீபியா, உகாண்டா ஆகிய நாடுகள் தகுதி சுற்றுகளில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பை தொடருக்குத் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான லோகோவை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி T20 உலகக் கோப்பைக்கான புதிய லோகோ ஒரு துடிப்பான தோற்றத்தைப் பெற்றுள்ளது. இந்த புதிய லோகோ, பேட், பந்து மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் ஆக்கப்பூர்வமான இணைவு ஆகும்.
அதாவது, சர்வதேச T20 கிரிக்கெட்டின் முக்கிய கூறுகளை இந்த லோகோ வெளிப்படுத்துகிறது. இந்த லோகோவை ஒரு காணொளியாகதொகுத்து ஐசிசி வெளியிட்டுள்ளது.