கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அப்பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தன. மக்கள் வீட்டில் உள்ள வாளி, பாத்திரங்களைக் கொண்டு, வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரை வெளியேற்றி வருகின்றனர். மேலும், பல இடங்களில் சாலை போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி, காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கனமழை மற்றும் காற்றினால் வாழை மரங்கள் சாய்ந்தன. சில வாழைகள் தண்ணீரிலும் அடித்து செல்லப்பட்டதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.