காஸாவில் போரை நிறுத்த ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தீர்மானத்தை அமெரிக்கா முறியடித்திருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்மூடித்தனமாக மக்களை சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் இராணுவம். இத்தாக்குதல் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. மேலும், காஸாவில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 17,000-த்தை தாண்டி இருக்கிறது.
இதனிடையே, இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம் கோரி, இஸ்லாமிய நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. பொதுசபையில் ஜோர்டான் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்த நிலையில், அமெரிக்கா உட்பட 14 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது.
ஆனால், இஸ்ரேல் இத்தீர்மானத்தை நிராகரித்தது. போர் நிறுத்தம் என்பது தீவிரவாதத்திடம் சரணடைவது போலாகும். ஆகவே, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆகவே, போர் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த சூழலில், ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்க கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக முதலில் 4 நாட்களும், பிறகு 2 நாட்களும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அப்போது, 65-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பதிலுக்கு, தங்கள் நாட்டு சிறையில் இருந்த 150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்தது.
இது ஒருபுறம் இருக்க, வான்வழித் தாக்குதலில் வடக்கு காஸாவை உருக்குலைத்த இஸ்ரேல், தற்போது தெற்கு காஸாவிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. கான்யூனிஸ் நகரைக் கைப்பற்றிய இஸ்ரேல் இராணுவம், தீவிரத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
இந்த நிலையில்தான், காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில், இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. இங்கிலாந்து பங்கேற்காத நிலையில், தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா வாக்களித்தது.
மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் இருக்கும் நிலையில், இத்தீர்மானம் ஹமாஸ் அமைப்பின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என்று தெரிவித்த அமெரிக்கா, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தீர்மானத்தை முறியடித்திருக்கிறது.
இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் வுட் கூறுகையில், “நீடித்த அமைதிக்கு இரு நாடுகளின் தீர்வைக் காண ஹமாஸ் விரும்பவில்லை. இஸ்ரேலில் ஹமாஸின் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறி விட்டனர்.
தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கிறோம். இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது ஹமாஸ் ஆட்சியைத் தொடர அனுமதிக்கும். இது அடுத்த போருக்கான விதைகளை மட்டுமே விதைக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.