அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையில், கருவறையின் முதல் படம் வெளிவந்துள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 22 ஜனவரி 2024 அன்று நடைபெற உள்ளது. ராம் லல்லா எனப்படும் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதை முன்னிட்டு, ஜனவரி 16-ம் தேதி முதல் மகாபூஜைக்கான சடங்குகள் தொடங்கும் என்று கோயில் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளது. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் கருவறையின் முதல் படத்தை விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) சர்வதேச துணைத் தலைவரும், ஸ்ரீ இராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளருமான சம்பத் ராய் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
பகவான் ஸ்ரீ ராம்லாலாவின் சன்னதி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. சமீபத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணியும் நிறைவடைந்துள்ளது. சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
प्रभु श्री रामलला का गर्भ गृह स्थान लगभग तैयार है। हाल ही में लाइटिंग-फिटिंग का कार्य भी पूर्ण कर लिया गया है। आपके साथ कुछ छायाचित्र साझा कर रहा हूँ। pic.twitter.com/yX56Z2uCyx
— Champat Rai (@ChampatRaiVHP) December 9, 2023
இதில் கோயிலின் கருவறை கிட்டத்தட்ட தயாராக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. படத்தில், பிரமாண்ட கருவறையின் சுவர்களிலும் குவிமாடத்திலும் அழகிய வேலைப்பாடுகள் தெளிவாகத் தெரிகிறது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை 86 வயது வேத அறிஞர் லக்ஷ்மிகாந்த் மதுராநாத் தீட்சித் முன்னின்று நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.