வேட்புமனுவில் சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் அளித்ததாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. கனீஸ் பாத்திமா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 104 இடங்களில் வெற்றிபெற்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. இந்த சூழலில், இம்மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் 135 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
அந்த வகையில், கர்நாடக மாநிலம் குல்பர்ஹா உத்தர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கனீஸ் பாத்திமா. இவர், தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் குறித்து தவறான தகவல்களை அளித்ததாகக் கூறி, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஏ.எஸ்.சரணபசப்பா வழக்கைத் தொடுத்திருக்கிறார்.
சரணபசப்பா தாக்கல் செய்திருக்கும் மனுவில், உள்நோக்கத்தோடு தனது சொத்து விபரங்களை மறைத்ததாக கனீஸ் பாத்திமா மீது குற்றம் சாட்டி இருந்தார். பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள கணக்கு விபரத்தை மறைத்ததாகவும், பெங்களூரூவில் உள்ள வீட்டின் சொத்து பங்கு குறித்து தெரிவிக்காததும், அசையும் சொத்துகளின் மதிப்பு 2018-ல் குறிப்பிடப்பட்டது போலவே இப்போதும் இருப்பது குறித்தும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.
இது தொடர்பாக கனீஸ் பாத்திமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மேற்படி வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, வழக்கை 4 வாரங்களுக்குப் பிறகு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில்தான், காங்கிர்ஸ எம்.எல்.ஏ. கனீஸ் பாத்திமா விளக்கம் அளிக்குமாறு கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது.