போரால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா நகர மக்களுக்குத் தேவையான நிவாரண பொருள்களை இந்தியா, ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் அனுப்பி வருகின்றன. ஆனால், இந்த மனிதாபிமான பொருள்களை ஹமாஸ் தீவிரவாதிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி இருக்கிறது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், அந்நாட்டுக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில், இஸ்ரேல் நாட்டில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான பதிலடித் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா நகரின் பெரும்பாலான பகுதிகள் உருக்குலைந்து போய்க் கிடக்கின்றன.
அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகள், பொதுமக்கள் என 18,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். 30,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தவிர, ஹமாஸ் தலைமையகம், முகாம்கள், சுரங்கப் பாதைகள் என ஆயிரக்கணக்கான இலக்குகளையும் இஸ்ரேல் இராணுவம் அழித்திருக்கிறது.
இந்தப் போர் 2 மாதங்களைக் கடந்தும் நடந்து வருகிறது. இதனிடையே, பிணைக் கைதிகளை விடுவிக்க சில நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த சமயத்தில் பிணைக் கைதிகளை விடுத்த ஹமாஸ் தீவிரவாதிகள், அதே நேரத்தில் இஸ்ரேல் மீதும் தாக்குதலை நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இத்தாக்குதல் தற்போது உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இதனிடையே, போரால் பாதிக்கப்பட்ட காஸா நகர மக்களுக்கு இந்தியா, ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகள் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.
இந்தப் பொருட்களை ஹமாஸ் தீவிரவாதிகள் கொள்ளையடிப்பதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இஸ்ரேல் இராணுவம், காஸாவின் தேவைகளை விட ஹமாஸ் அமைப்பினர் தீவிரவாதத்துக்கே முன்னுரிமை அளித்து வருகின்றனர் என்று கூறி இருக்கிறது.