மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான யுபிஐ கட்டண வரம்பு உயர்த்தப்பட்டதை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான யுபிஐ கட்டண வரம்பை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவதாக ரிசர்வ் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.
இது நுகர்வோர் கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்வோருக்கு அதிகளவில் பணம் செலுத்த உதவும் என்றும் கூறினார். யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர். ஒரு லட்சம் என்பது மிகக்குறைவான தொகையாக இருந்ததாகவும், தற்போது 5 லட்சமாக பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது நோயாளிகளுக்கு பெரிய அளவில் பயன் உள்ளதாக இருக்கும் என கேர்பே இணை இயக்குநர் கௌரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கையை கல்வித்துறையினரும் வரவேற்றுள்ளனர். மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு டிமாண்ட் டிராஃப்ட் போன்ற மாற்று வழிகளை நம்பாமல் தடையின்றி பணம் செலுத்த உதவும் என அவர்கள் கூறியுள்ளனர்.