கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 38-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. இங்குள்ள இயற்கை அழகை இரசிப்பதற்காகவும், அருவியில் குளித்து மகிழ்வதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
கடந்த மாதம் மேற்குத் தொடர்ச்சி மலை, வட்டக்கானல், வெள்ளக்கெவி ஆகிய பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 38-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று வார விடுமுறை நாள் என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க ஆர்வத்துடன் வந்த நிலையில், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.