காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்டிருக்கும் 300 கோடி ரூபாய் குறித்து ராகுல் காந்தி பதில் சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தி இருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தீரஜ் சாஹூ. மிகப்பெரிய அளவில் மதுபான ஆலை நட்த்திவருகிறார். இவர், வரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தீரஜ் சாஹுவுக்குச் சொந்தமாக ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இச்சோதனையில் இதுவரை 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வரும் என்று கூறியிருந்தார். அதேபோல, காங்கிரஸ் எம்.பி.யின் ஊழலை கண்டித்து டெல்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால், இச்சம்பவம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேசமயம், மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் மட்டும் பெயரளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், இதுகுறித்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இது புதிய இந்தியா. இங்கு ராஜ குடும்பம் என்ற பெயரில் வெகுஜனங்களை சுரண்ட முடியாது. சட்டம் தனது கடமையைச் செய்யும்.
ஊழலுக்கு காங்கிரஸ் உத்திரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு நரேந்திர மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்பப் பெறப்படும். நீங்களும் உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.