காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹூவின் அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் 50 ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதோடு, 40 மெஷின்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) மண்டல மேலாளர் தெரிவித்திருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹூ. இவர், மிகப் பெரிய அளவில் மதுபான தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது தொழிற்சாலை வரி ஏய்ப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இவருக்குச் சொந்தமான ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனையைத் தொடங்கினர்.
இச்சோதனையில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, கட்டுக்கட்டாக கரன்ஸிகள் வந்த வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது. நேற்று வரை மட்டும் 176 பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஒடிஸா மாநிலத்தின் பொலாங்கிரில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 300 கோடி ரூபாய் இருந்தது. பெரும்பாலும் எல்லாம் 500 ரூபாய் கட்டுகள்தான்.
பணத்தை தொடர்ந்து எண்ணியதால், பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால், பல வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு எண்ணப்படுகின்றன. இது தவிர, 3 இடங்களில் 7 அறைகளில் 9 லாக்கர்களில் உள்ள பணம் இன்னும் எண்ணப்படவில்லை. மேலும் பல இடங்களில், நகை, பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
முதலில் இந்தப் பணத்தை எண்ணி முடித்த பிறகு, இனி பறிமுதல் செய்யப்படும் பணத்தை எண்ண அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆகவே, பறிமுதல் செய்யப்படும் பணத்தின் மொத்த தொகை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இச்சோதனையில் 150 வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். அதோடு, ஐதராபாத்தில் இருந்து 20 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மது ஆலையின் டிஜிட்டல் ஆவணங்களை சரிபார்க்கும் சோதனையும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருக்கும் எஸ்.பி.ஐ. மண்டல மேலாளர் பகத் பெஹரா கூறுகையில், “எங்களுக்கு 176 பைகள் கிடைத்தன. அவற்றில் 140 பைகள் எண்ணப்பட்டு விட்டன. மீதமுள்ளவை எண்ணப்பட்டு வருகின்றன. பணம் எண்ணும் பணியில் 3 வங்கிகளைச் சேர்ந்த 50 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். சுமார் 40 பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.