ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் நீீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி 16 நாட்கள் நடைபெற்றது.
அப்போது, மத்திய அரசு முடிவுக்கு எதிராக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் உட்பட மொத்தம் 18 வழக்கறிஞர்கள் வாதாடினர். அதேபோல, அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு வாதாடியது.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. இதனிடையே, ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு ரத்து வழக்கில் டிசம்பர் மாதம் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்திருந்தார். எனவே, தீர்ப்பு எப்படி இருக்கும் என்று அனைத்துத் தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில் தலைமை நீதிபதி சந்திரசூட் ஒரு தீர்ப்பும், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் வேறு மாதிரியான தீர்ப்பும், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மற்றொரு தீர்ப்பும் என 3 தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அதேசமயம், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா இருவருமே மற்ற 3 நீதிபதிகளின் தீர்ப்புடன் ஒத்துப்போவதாக அறிவித்திருக்கின்றனர். ஆகவே, தீர்ப்பு 3 வகையாக இருந்தாலும், ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, தலைமை நீதிபதி வாசித்த தீர்ப்பில், “ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும்போது, அம்மாநிலம் தொடர்பாக மத்திய அரசு முடிவுகளை எடுக்கக் கூடாது என்று கூற முடியாது. அப்படிக் கூறினால் அது அரசியலமைப்புப் பணிகளை தடுப்பது போலாகும்.
அதேபோல, ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது அங்கு மத்திய அரசு முக்கியமான மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று தடை விதிக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்பது இந்திய அரசியலமைப்பின் 1 மற்றும் 370-வது பிரிவுகளில் இருந்து தெளிவாகிறது.
மேலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு விதி, அதிகார வரம்புகள் இருக்கின்றன. ஆனால், ஜம்மு காஷ்மீருக்கு “இறையாண்மை” என்பது கிடையாது. இந்தியாவுடன் இணையும்போது காஷ்மீருக்கு இறையாண்மை இல்லை. காஷ்மீர் அரசியல் சாசனத்திலும் இறையாண்மை இல்லை.
தவிர, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டம் தற்காலிகமானதே. அந்தச் சட்டம் நிரந்தரமான வசதியை கொடுக்கும் சட்டம் கிடையாது. சுதந்திரப் போர் காலத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வசதி” என்று தலைமை நீதிபதி தீர்ப்பில் கூறியிருக்கிறார்.