காஸா நகரின் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதோடு, இஸ்ரேலுக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. முப்படைகளையும் ஏவிவிட்டு இஸ்ரேல் நடத்திய அசுரத் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது. ஹமாஸ் தீவிரவாதிகளும், காஸா நகர மக்களும் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர்.
இதையடுத்து, போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. உட்பட உலக நாடுகள் பலரும் இஸ்ரேலை வலியுறுத்தன. ஆனால், அனைவரின் கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது. தங்களது நாட்டு பிரஜைகளை கொன்று குவித்த ஹமாஸ் தீவிரவாதிகளை வேரோடு அழிக்கும் வரை போர் ஓயாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதனிடையே, போரால் பாதிக்கப்பட்ட காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்யவும், ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.
இதன் பயனாக, 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டு, 105 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இன்னும் 100-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் ஹமாஸ் பிடியில் இருக்கிறார்கள். இந்த சூழலில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், மீண்டும் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது. ஏற்கெனவே, வடக்கு காஸா நகரம் உருக்குலைந்து கிடக்கும் நிலையில், தற்போது தெற்கு காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 18,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக காஸா நகர சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில்தான், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை பிணைக் கைதிகள் யாரும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று ஹமாஸ் தீவிரவாதிகளின் ஆயுதப்பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு ஒபையா மிரட்டல் விடுத்திருக்கிறார்.
எனினும், ஹமாஸ் தீவிரவாதிகளின் எச்சரிக்கையை ஒதுக்கிவிட்டு, காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசி வருகிறது. இதனிடையே, காஸாவில் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வருவதற்கும், பிணைக் கைதிகளை விடுவிப்பதற்குமான முயற்சியில் கத்தார் நாடு ஈடுபட்டிருக்கிறது.