உலகின் மிகப் பெரிய சேவை நிறுவனம் இந்தியன் இரயில்வே துறை ஆகும். கடந்த 130 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இதில், சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பயணிகள் நலனை கருத்தில் கொண்டு பயணிகள் இரயிலும், பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்ல, சரக்கு இரயிலும் நாடு முழுவதும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில்தான், செங்கல்பட்டு இரயில் நிலையம் அருகே சரக்கு இரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு இரயில் காவல் நிலைய இரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டது.
இதையடுத்து, சரக்கு இரயில் உடனே நிறுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தடம் புரண்ட சரக்கு இரயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியிலும், தண்டவாளத்தைச் சீர் செய்யும் பணியிலும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இயந்திரங்களின் உதவியோடு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காலை முதல் கடந்த 4 மணி நேரமாக செங்கல்பட்டில் புறநகர் இரயில்கள் இயங்காததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
திருமால்பூரில் இருந்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு வழியாகச் சென்னை கடற்கரை செல்லும் ஒரு இரயில் மட்டுமே வந்ததால், அந்த இரயிலில் ஆபத்தான முறையில் பயணிகள் பயணம் செய்தனர்.
42 பெட்டிகளுடன் சென்ற சரக்கு இரயிலின் பாரம் தாங்காமல் 10 பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில்தான், விபத்துக்கான முழு காரணமும் தெரியவரும்.