மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் சக்தி மசாலா புகழ்பெற்ற மசாலா நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக துரைசாமி மற்றும் அவரது மனைவி சாந்தி துரைசாமி ஆகியோர் இருந்து வருகிறார்கள். மேலும், துரைசாமி சிகரம் ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி மையத்தின் பொருளாளராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் மிக்ஜாம் புயல் தமிழகத்தையே புரட்டிப் போட்டு விட்டது. 6 நாட்களுக்கு மேலாகியும் பல்வேறு இடங்களில் இன்னும் வெள்ளம் வடிந்த பாடில்லை. தமிழக புயல் பாதிப்புக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், சிகரம் ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி மையத்தின் பொருளாளரும், சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களுமான துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.