மத்தியப் பிரதேச முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர், ஏற்கெனவே முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 163 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. இதையடுத்து, மாநிலத்தின் முதல்வராக இருந்து சிவராஜ் சிங் சௌஹானுக்கே மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
ஆனால், மேற்கண்ட 3 மாநிலங்களிலுமே புதுமுகங்களை முதல்வராக பா.ஜ.க. தலைமை முடிவு செய்தது. எனவே, முதல்வர் யார் என்பதை அறிவிப்பதில் தாமதமானது. இதையடுத்து, 3 மாநில முதல்வர்களையும் தேர்வு செய்வதற்காக, மத்தியப் பார்வையாளர்களை பா.ஜ.க. தலைமை நியமித்தது.
அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இக்குழுவினர் இன்று மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முதல்வர் குறித்து விவாதித்தனர்.
அப்போது, முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த மோகன் யாதவ், முதல்வராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மத்திய பார்வையாளர்கள் மற்றும் கட்சியினர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட மோகன் யாதவ் கூறுகையில், “நான் கட்சியில் ஒரு சாதாரணத் தொண்டன். என்னை முதல்வராகத் தேர்வு செய்த உங்களுக்கும், மாநிலத் தலைமை மற்றும் மத்தியத் தலைமைக்கும் எனது நன்றி. உங்கள் அன்பு மற்றும் ஆதரவுடன் எனது பொறுப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்” என்று கூறினார்.