மிக்ஜம் புயல் வெள்ளத்தால் அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அதனை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக கடந்த 4 – ம் தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் உள்ளே புகுந்தது. இதில் பலரின் அரசு சான்றிதழ்கள், பணி அனுபவ சான்றிதழ், பள்ளி, கல்லூரி சான்றிதழ் சேதமானது.
இந்நிலையில், அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அதனை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் கட்டணமின்றி பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெற இன்று (டிச.12) முதல் சிறப்பு முகாம்கள் தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன.
அதன்படி திருவொற்றியூர், மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், உள்ளிட்ட 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.