ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்தது செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றிருக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.ஹெச்.பி.) சர்வதேச செயல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், சட்டப்பிரிவு 370 சர்ச்சை முடிந்து விட்டது. இனி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது என்று கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடித் தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதாவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தனர். மேலும், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததும் செல்லும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இத்தீர்ப்பை வரவேற்று பேசியிருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வேதச செயல் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், மேற்கண்ட தீர்ப்பு காவி சித்தாந்தவாதியும், பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனருமான ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.
இத்தீர்ப்பின் மூலம், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 1947-48-ல் மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட இணைப்புக் கடிதம் இறுதியானது, செல்லுபடியானது மற்றும் மாற்ற முடியாதது என்பதை இன்றைய தீர்ப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சில அரசியல் தவறான புரிதல்கள் காரணமாக , அப்போதைய அரசியல் தலைமை ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கியது. ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி தடையின்றி தொடரும்.
தற்போது ஜம்மு காஷ்மீரில் முடிக்கப்படாத ஒரே செயல்திட்டம் பாகிஸ்தானின் பிடியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதாகும். வலுவான இந்தியாவும், உறுதியான அரசாங்கமும் விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.