இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு 8:30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்தியா கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு டாஸ் கூட போடாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியிலும் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய அணிக்குப் பெரிய சிக்கலாக மாறும். ஏனெனில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை டி20 தொடருக்காக வீரர்கள் தேர்வு குறித்து பிசிசிஐ – க்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் மட்டுமே டி 20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தங்களது இடத்தை உறுதி செய்துகொள்ளும் நிலையில் உள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சீராக ரன்கள் குவித்து வரும் நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் டி20 அணிக்கு திரும்பினால் இவர்களது நிலை என்னவாகும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படாமல் உள்ளது.
ஆகையால் இன்றையப் போட்டியில் மழைவர கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இன்றையப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்குத் தொடங்கவுள்ளது.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்திய அணி 55 % வெற்றி பெரும் என்றும் தென் ஆப்பிரிக்கா 45 % வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.