ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “டிசம்பர் 11-ம் தேதி இந்திய உச்ச நீதிமன்றம் 370 மற்றும் 35 (A) சட்டப்பிரிவுகளை ரத்து செய்தது தொடர்பான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பின் மூலம் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நீதிமன்றம் நிலைநிறுத்தி இருக்கிறது.
இது ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படுகிறது. 2019 ஆகஸ்ட் 5-ம் தேதியன்று எடுக்கப்பட்ட முடிவு அரசியலமைப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதே தவிர, சிதைப்பதற்கு அல்ல என்பதை உச்ச நீதிமன்றம் சரியாகக் கணித்திருக்கிறது. மேலும், 370-வது பிரிவு நிரந்தரமானது அல்ல என்ற உண்மையையும் நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் நிலப்பரப்புகள், அமைதியான பள்ளத்தாக்குகள் மற்றும் கம்பீரமான மலைகள் தலைமுறை தலைமுறையாக கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் சாகசக்காரர்களின் இதயங்களை கவர்ந்திருக்கின்றன. ஆனால், கடந்த 7 தசாப்தங்களாக இந்த இடங்கள் மிக மோசமான வன்முறையால் உறுதியற்ற தன்மையில் இருந்தன.
மேலும், பல நூற்றாண்டு காலனித்துவ ஆட்சியின் காரணமாக, பொருளாதார மற்றும் மன ரீதியாக அடிபணிந்ததன் காரணமாக, நாம் ஒரு குழப்பமான சமூகமாக மாறினோம். மிக அடிப்படையான விஷயங்களில் தெளிவான நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பதிலாக, குழப்பத்திற்கு வழிவகுத்த இருமையை அனுமதித்தோம். துரதிருஷ்டவசமாக ஜம்மு காஷ்மீர் இத்தகைய மனநிலைக்கு பலியாகி விட்டது.
சுதந்திரத்தின்போது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஒரு புதிய தொடக்கத்தை எடுப்பதற்கான ஒரு தேர்வு எங்களுக்கு இருந்தது. மாறாக, நீண்டகால தேசிய நலன்களைப் புறக்கணித்தாலும், குழப்பமான சமூக அணுகுமுறையைத் தொடர முடிவு செய்தோம். எனது வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்தே ஜம்மு காஷ்மீர் மக்களுடன் இணைந்திருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஜம்மு காஷ்மீர் வெறும் அரசியல் பிரச்சனையாக இல்லாத ஒரு கருத்தியல் கட்டமைப்பைச் சேர்ந்தவன் நான். ஆனால், அது சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதாக இருந்தது. டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, நேரு அமைச்சரவையில் ஒரு முக்கியமான இலாகாவை வகித்தார். மேலும், நீண்ட காலம் அரசாங்கத்தில் இருந்த அவர், காஷ்மீர் பிரச்சனைக்காக அமைச்சரவையில் இருந்து விலகினார்.
அவரது முயற்சிகள் மற்றும் தியாகம் கோடிக்கணக்கான இந்தியர்களை காஷ்மீர் பிரச்சனையில் உணர்வுப்பூர்வமாக இணைக்க வழிவகுத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீநகரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், அடல் பிஹாரி வாஜ்பாய் ‘இன்சானியத்’, ‘ஜம்ஹூரியத்’ மற்றும் ‘காஷ்மீரியத்’ ஆகியவற்றின் சக்திவாய்ந்த செய்தியை வழங்கினார். இது பெரும் உத்வேகத்தை அளித்தது.
ஜம்மு காஷ்மீரில் நடந்தது நமது தேசத்திற்கும், அங்கு வாழும் மக்களுக்கும் செய்யும் மாபெரும் துரோகம் என்பது எனது உறுதியான நம்பிக்கை. மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை அகற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்பது எனது வலுவான விருப்பமாகவும் இருந்தது. ஜம்மு காஷ்மீர் மக்களின் துன்பத்தைப் போக்க நான் எப்போதும் உழைக்க விரும்பினேன்.
ஆனால், இதற்கு 370 மற்றும் 35 (A) ஆகியவை பெரும் தடைகளாக இருந்தன. அது ஒரு உடைக்க முடியாத சுவர் போல் தோன்றியது. அதேசமயம், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள். அதேபோல, சக இந்தியர்களுக்குக் கிடைத்த உரிமைகள் மற்றும் மேம்பாட்டு, 370 மற்றும் 35 (A) பிரிவுகளால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்தன.
இதனால், ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஒரு இடைவெளி உருவாக்கப்பட்டது. இந்த தூரம் காரணமாக, ஜம்மு காஷ்மீர் பிரச்சனைகளை தீர்க்க உழைக்க விரும்பிய நம் தேசத்தைச் சேர்ந்த பலர், அங்குள்ள மக்களின் வலியை தெளிவாக உணர்ந்தாலும் அதைச் செய்ய முடியவில்லை. கடந்த பல தசாப்தங்களாக இப்பிரச்சனையை நெருக்கமாகப் பார்த்த ஒரு காரியகர்த்தா என்ற முறையில், பிரச்சனையின் பிரத்தியேகங்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய நுணுக்கமான புரிதல் எனக்கு இருந்தது.
ஆனாலும்கூட, நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தேன். ஜம்மு காஷ்மீர் மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் பலம் மற்றும் திறன்களின் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளின் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், வன்முறை இல்லாத வாழ்க்கையையும் விரும்புகிறார்கள்.
ஆகவே, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சேவை செய்யும்போது, குடிமக்களின் கவலைகளைப் புரிந்துகொள்வது, ஆதரவான செயல்கள் மூலம் நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் வளர்ச்சி, மேம்பாடுக்கு முன்னுரிமை அளிப்பது ஆகிய 3 தூண்களுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம்.
2014-ல் நாங்கள் பதவியேற்ற பிறகு, ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்டு பள்ளத்தாக்கில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன. செப்டம்பர் 2014-ல் நிலைமையை மதிப்பிடுவதற்காக நான் ஸ்ரீநகருக்குச் சென்றேன். அப்போது, பல்வேறு தரப்பு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த உரையாடல்களின்போது, மக்கள் வளர்ச்சியை விரும்புவது மட்டுமல்லாமல், பல தசாப்தங்களாக நிலவும் பரவலான ஊழலில் இருந்து விடுதலை பெறவும் விரும்பினர்.
எனவே, அந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்தேன். மேலும், நானும் தீபாவளி நாளில் ஜம்மு காஷ்மீரில் இருக்க முடிவு செய்தேன். அதோடு, ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், எங்கள் அரசாங்க அமைச்சர்கள் அடிக்கடி அங்கு சென்று மக்களுடன் நேரடியாகப் பேசுவது என்று முடிவு செய்தோம். ஜம்மு காஷ்மீரில் நல்லுறவை வளர்ப்பதில் இந்த வருகைகள் முக்கிய பங்கு வகித்தன.
மே 2014 முதல் மார்ச் 2019 வரை 150-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வருகை தந்திருக்கிறார்கள். 2015-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது மாநிலத்தின் வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க படியாகும். குறிப்பாக, உள்கட்டமைப்பு மேம்பாடு, வேலை உருவாக்கம், சுற்றுலா மேம்பாடு மற்றும் கைவினைத் தொழிலுக்கு ஆதரவளிப்பதற்கான முன்முயற்சிகளைக் கொண்டிருந்தது.
ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களின் திறனை உணர்ந்து, விளையாட்டின் சக்தியை நாங்கள் பயன்படுத்தினோம். விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்பட்டு, பயிற்சி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். உள்ளூர் கால்பந்து கிளப்களை அமைப்பதை ஊக்குவிப்பது மிகவும் தனித்துவமான விஷயங்களில் ஒன்றாகும்.
இதன் மூலம் திறமையான கால்பந்து வீரர் உருவாக்கப்பட்டார். அவர் அஃப்ஷான் ஆஷிக் என்ற பெயர் என் நினைவுக்கு வருகிறது. டிசம்பர் 2014-ல் ஸ்ரீநகரில் கல்வீசும் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். பின்னர், சரியான வழிகாட்டுதலுடன் கால்பந்தாட்டத்திற்கு திரும்பினார். அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, விளையாட்டில் சிறந்து விளங்கினார். ஃபிட் இந்தியா டயலாக் ஒன்றில் அவருடன் உரையாடியது எனக்கு நினைவிருக்கிறது. மற்ற இளைஞர்கள் கிக் பாக்ஸிங், கராத்தே மற்றும் பலவற்றில் பிரகாசிக்கத் தொடங்கினர்.
இதன்பின், மத்திய அரசிலிருந்து வெளியேறினாலும், ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற கோட்பாட்டை உறுதியாக பின்பற்றுவது என்று தீர்மானித்தோம். பஞ்சாயத்து தேர்தல்களின் வெற்றி ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக தன்மையை வெளிப்படுத்தியது.
ஊராட்சித் தலைவர்களுடன் நான் கலந்துரையாடியது என் நினைவுக்கு வருகிறது. அப்போது, எந்த இடத்திலும் பள்ளிகள் எரிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, அவர்கள் நான் முன் வைத்தேன். இது, ஏற்றுக் கொள்ளப்பட்டது. பள்ளிகள் எரிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது சிறு குழந்தைகள்தான்.
2019 ஆகஸ்ட் 5 வரலாற்று சிறப்புமிக்க நாள் என்பது ஒவ்வொரு இந்தியனின் இதயங்களிலும் மனதிலும் பொறிக்கப்பட்டுள்ளது. 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை நமது நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதன் பிறகு, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தற்போது, 2023 டிசம்பரில் நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. அதற்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் அணிவகுப்பை கண்டுள்ளன. 4 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (ஏ)வை ரத்து செய்யும் முடிவை பார்லிமென்ட் எடுத்தபோது, அது மக்கள் மன்றத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
கடந்த 4 ஆண்டுகளில் அரசியல் நிலைப்பாட்டில் ஜனநாயகத்தின் வேர்களில் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கான பலன்களை பெறவில்லை. அதேபோல, லடாக் மக்களின் விருப்பங்களும் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டன.
இவை அனைத்தையும் 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி மாற்றியது. அனைத்து மத்திய சட்டங்களும், இப்போது எந்தவித தயக்கமும் பாரபட்சமும் இன்றி அமல்படுத்தப்படுகின்றன. பிரதிநிதித்துவமும் பரவலாக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் முறை அமலில் இருக்கிறது. வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
மத்திய அரசின் முக்கியமான திட்டங்கள், கிட்டத்தட்ட முழுமையடையும் கட்டத்தில் உள்ளதால். சமூகத்தின் அனைத்துப்பிரிவு மக்களும் இவற்றால் பயன் அடைந்துள்ளனர். இவற்றில் கிராமங்களில் 100 சதவீத மின்வசதியை உறுதி செய்யும் சௌபாக்யா, இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கும் உஜ்வாலா மற்றும் எல்.இ.டி. மின்விளக்குகளை சலுகை விலையில் வழங்கும் உஜாலா திட்டங்கள் அடங்கும்.
வீட்டு வசதி திட்டங்கள், குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டது. மக்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்த சுகாதார வசதிக்கான அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களும், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை அடைந்தன.
அரசுப் பணியிடங்களை நிரப்புவதில் ஊழலும் ஒரு தலைப்பட்சமும் இருந்த நிலை மாறியது. வெளிப்படைத்தன்மையோடு, முறையான நடைமுறைகளோடு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. சிசு இறப்பு விகிதம் போன்ற இதர விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அனைவருக்கும் கண்கூடானது.
இதற்கான பெருமை இயல்பாகவே ஜம்மு காஷ்மீர் மக்களின் மன உறுதிக்கு உரியது. இங்குள்ள மக்கள் வளர்ச்சியை மட்டுமே விரும்புகின்றனர் என்பதையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தின் சக்திகளாக இருக்கவே விரும்புகின்றனர் என்பதையும், மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவற்றின் அந்தஸ்து ஒரு கேள்விக்குறியாக இருந்தது. இப்போது வளர்ச்சி, முன்னேற்றம் சுற்றுலா பயணியர் வருகை ஆகியவற்றில், வியத்தகு சாதனை நிகழ்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பு, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை வலுப்படுத்தியுள்ளது. ஒற்றுமையின் பிணைப்புகள், நல்லாட்சிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு போன்றவற்றை இது வரையறுத்துள்ளது. இப்போது, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், ஓவியம் தீட்டுவதற்கான தூய்மையான சித்திர துணியை போல பிறக்கின்றன. அப்படிப் பிறக்கும் ஆண் அல்லது பெண் குழந்தைகள்தான், தங்களின் துடிப்பான எதிர்கால விருப்பங்களை அதில் வண்ண ஓவியங்களாக தீட்ட இயலும்.
இப்போது மக்களின் கனவுகள், கடந்த காலத்தின் சிறைகளாக இல்லாமல், எதிர்காலத்தின் சாத்தியங்களாக இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக அதிருப்தி, ஏமாற்றம், விரக்தி போன்றவற்றுக்கு மாற்றாக வளர்ச்சி, ஜனநாயகம், கண்ணியம் போன்றவை இடம் பெற்றுள்ளன. ஒரே பாரதம், உன்னத பாரதத்திற்கு வலுசேர்த்த தீர்ப்பு!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.