19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் மொத்தமாக 16 அணிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த தொடர் முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி இடைநீக்கம் செய்ததனால் இந்த தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-வில் நடப்புச் சாம்பியன் இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகளும், குரூப் சி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா அணிகளும், குரூப் டி-யில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடருக்கான முதல் போட்டியில் ஜனவரி 19 ஆம் தேதி அமெரிக்கா – அயர்லாந்து அணிகளும், தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் மோத உள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜனவரி 20ம் தேதி வங்காளதேசத்தை எதிர் கொள்ள உள்ளது.
மேலும் இத்தொடரின் அரையிறுதி போட்டி பிப்ரவரி 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.