நேருவின் ஒரு பிழைகாரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டும் தாய் மடியில் இணைந்திருக்கிறது காஷ்மீர குழந்தை எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
பரூக் அப்துல்லா குடும்பத்துக்கும் நேருவுக்கும் ஒரு நெருக்கம் இருந்தது என்பது வரலாற்று குறிப்பு! அந்த நெருக்கம் திரைமறைவானது! கட்டுரைகளில் எழுதக்கூடியது அல்ல! ஆனால் அந்த நட்பின் அடிப்படையில்தான், சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கரின் எதிர்ப்பையும் மீறி, அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் இல்லாத வேளையில், 370 தாவது சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது! மொத்தத்தில் சட்டதிருத்தம் 370 என்பது ஒரு வரலாற்று கறை! கறையை ஏற்படுத்தியது நேருவின் சுயநலம்!
நேருவின் இந்த நடவடிக்கையை எதிர்த்த, பாஜகவின் முன்னோடி கட்சியான பாரதிய ஜனசங்கத்தின் ஸ்தாபகராண சியாமா பிரசாத் முகர்ஜி அவர்கள், நேருவால் தனி அந்தஸ்து வழங்கப்பட்ட காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் 370 தாவது சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராடினார்!
சியாமா பிரசாத் முகர்ஜியை, ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையினர், 11 மே 1953இல் கைது செய்து சிறையில் அடைத்தனர். 23 சூன் 1953இல் விஷக்காய்ச்சலால் மரணமடைந்தார் என காவல் துறை அறிவித்தது. கொலை செய்யப்பட்டார் என செய்திகள் பரவின! காஷ்மீருக்காக பலிதானமான தலைவரின் இயக்கம்தான் பாரதிய ஜனதா கட்சி!
ஏப்ரல் 6, 1980 ல் சியாம பிரசாத் முகர்ஜி அவர்களால் துவக்கி நடத்தப்பட்ட பாரதிய ஜனசங்கம் என்னும் கட்சி பாரதிய ஜனதா கட்சி என அடல்பிகாரி வாஜ்பாய் லால்கிருஷ்ண அத்வானி அவர்களால் துவக்கப்பட்டபோது, 370 தாவது சட்டத்திருத்தம் நீக்கப்படும், அயோத்தியில் அன்னியர்களால் சிதைக்கப்பட்ட ராமர் கோயில் மீண்டும் கட்டப்படும், நாட்டில் எல்லோருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் இயற்றப்படும்! என மூன்று கொள்கைகள் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியமான கொள்கைகளாக வகுக்கப்பட்டன!
தலைவர்கள் மாறினாலும் கொள்கை மாறாது என செயல்படும் பாரதிய ஜனதா கட்சி முதல் இரண்டையும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நிறைவேற்றிவிட்டது! மூன்றாவது கொள்கையான பொது சிவில் சட்டத்திற்கான விவாதத்தை முறையாக துவக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு!
ஜம்மு காஸ்மீருக்கான விசேச திருத்தச்சட்டம், 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி பாரதிய ஜனதா அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டது! ஜம்முவும் காஷ்மீரும் தனித்தனி மாநிலங்களாகவும், லடாக் என்னும் பகுதி மத்திய அரசின் நேரடி ஆளுமையில் விளங்கும் யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது!
மத்திய அரசின் இந்த அனைத்து சீர்திருத்த செயல்பாடுகளையும் எதிர்த்து ஏறத்தாள 20 வழக்குகள் தொடுக்கப்பட்டன! வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 11.12.2023 அன்று ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது!
”2019 ஆகஸ்ட் 5 ம் தேதி மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை செல்லும்”, என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது! ”நாட்டின் ஜனாதிபதி அவர்கள் 1948 ல் வழங்கப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கான விசேச உரிமைகளை நீக்கிவிடுவதாக 2019 ஆகஸ்ட் 5 ம் தேதி அறிவித்தது செல்லும், அப்படி அறிவித்தது, இந்திய அரசியலமைப்பு சட்டபடியான நடவடிக்கைதான் ” என்பதுதான் தீர்ப்பின் கருத்து!
370 தாவது சட்டத்திருத்தம் நடைமுறையில் இருந்த கால கட்டத்தில், காஸ்மீரி மக்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது! அந்த மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டுத்தருவதே ஜனாதிபதி அவர்களின் நடவடிக்கையாக இருந்தது!
1989, 1990, 1991 களில் காஷ்மீர் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டார்கள், ஆண்கள் கொலை செய்யப்பட்டார்கள், இந்த அனியாயத்தை தடுத்து நிறுத்திட முடியாமல் இருந்தது! காரணம் 370 தாவது சட்ட திருத்தத்தின்படி இந்திய சட்டங்கள் ஜம்மு காஷ்மீருக்குள் செல்லுபடியாகாது!
குறிப்பிட்ட நாளையும் நேரத்தையும் குறிப்பிட்டு ”அந்த நேரத்துக்குள் காஷ்மீரில் வசிக்கும் ஹிந்துக்கள் அனைவரும் மாநிலத்தை விட்டு வெளியேறவேண்டும். தவறும் நிலையில் பெண்களை விட்டுவிட்டு ஆண்கள் மட்டுமே செல்ல வேண்டும்!” என வழிபாட்டு ஸ்தலங்களில் அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது!
சில சமயங்களில் மாநிலம் முழுமையும் பல சந்தர்ப்பங்களில் அந்தந்த பகுதிகளிலும் இத்தகைய அறிவிப்புகள் வழிபாட்டு ஸ்தலங்கள் வாயிலாக ஒலிபரப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது! அந்த தருணங்களில் 30,000 காஷ்மீர் ஹிந்துக்கள் தங்களின் வாழ்விடத்தை விட்டு மாநிலத்தை விட்டு வெளியேறினர்! 10,000 பேர் கொலை செய்யப்பட்டார்கள் என செய்திகள் உள்ளன!
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் நடை முறையில் இருக்கும் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்னும் சட்ட நடவடிக்கை ஜம்முகாஷ்மீரில் இல்லை! மனித மலத்தை மனிதன் அள்ளக்கூடாது என்னும் சட்ட நடைமுறை ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது! அங்கு பட்டியலின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள்!
ஜம்மு காஷ்மீரில் ஒரு பெண் வெளி மாநிலத்தவரை திருமணம் செய்துக்கொண்டால் அந்த பெண் தனது குடும்ப சொத்தினை திருமணத்தின்போது இழந்துவிடுவாள்! எடுத்துச் செல்ல முடியாது!
ஆனால் ஒரு ஆண் வெளி மாநிலத்தவரை திருமணம் செய்தால், அவரது குடும்ப சொத்தை அவர் இழக்க மாட்டார்! இந்தியாவின் இதர மாநிலத்தவர்கள் யாரும் காஷ்மீரில் இடம் வாங்கமுடியாது! காஷ்மீர் மாநிலத்தவர் வெளி மாநிலங்களில் இடம் வாங்கலாம்!
ஜம்மு காஷ்மீருக்கு தனியாக ஒரு கொடி! தனியாக சட்டங்கள், இந்திய சட்டங்களை ஜம்மு காஷ்மீர் சட்டசபை ஏற்றுக்கொண்டால் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம், இல்லை என்றால் அந்த இந்திய சட்டம் ஜம்மு காஷ்மீர் மக்களை பாதிக்காது!
இப்படியெல்லாம் சட்ட திருத்தங்களை சட்ட மேதை அம்பேத்கரின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றிக்கொடுக்க நேருவுக்கு என்ன நிர்ப்பந்தம் இருந்தது என்பது இன்னும் வெளியில் பேசப்படாத பொருளாக உள்ளது! காங்கிரஸ் ஆட்சியின்போது ஜம்முகாஷ்மீரில் இந்திய தேசிய கொடியை ஏற்றுவதே சவாலாக இருந்தது!
பாகிஸ்தானின் கூலிப்படைகளாக ஜம்முகாஷ்மீர் அரசியல்வாதிகள் விளங்கினர்! காஷ்மீர் தேசத்தின் எல்லைபகுதியாக இருந்ததால், ராணுவ நிலைகள் அதிகமாக செயல்படவேண்டிய அவசியம் உள்ளது! காஷ்மீர் அரசியல்வாதிகள் சிறுவர்களுக்கு பயிற்சி கொடுத்து இந்திய ராணுவத்தினர் மீது கற்களை கொண்டு தாக்கிவந்தனர்! ராணுவத்தினர் மீது கற்களை வீசி 500, 1000 ஊதியம் வாங்குவது அங்குள்ளோர் வேலையாக இருந்தது! காரணம் அவர்களுக்கு வேறு வேலைகள் இல்லை! 370 காரணமாக அங்கு போதிய பள்ளிக்கூடங்கள் இல்லை! தொழிற்சாலைகள் இல்லை!
ஜம்முகாஷ்மீரில் சட்டசபை இருந்தாலும் சட்டசபையின் தலைமை அமைச்சர் பிரதமர் என அழைக்கப்பட்டாலும், தனியாக கொடியும் மரியாதையும் இருந்தாலும், அங்கு பொருளாதார வளர்ச்சி இல்லை!
இந்திய தேசத்திற்கு எதிரான காட்டுமிராண்டிகளாகவே இளைஞர்கள் உருவாக்கப்பட்டார்கள்! அத்தனை சீரழிவுக்கும் காரணமாக சட்டத்திருத்தம் 370 நடைமுறையில் இருந்ததுதான்! குறிப்பிட்டு சொல்லத்தக்க சில அரசியல் குடும்பங்கள் மட்டும் மத்திய அரசின் நிதியை பெற்று தங்களின் குடும்ப வளர்ச்சிக்கு பயன்படுத்தி பெரும் பணக்காரர்களாக உருவெடுத்தார்கள்!
2019 ஆகஸ்ட் 5 ல் 370 வதாவது சட்டத்திருத்தமான ”விலங்கு” நீக்கப்பட்டதிலிருந்து காஷ்மீரும் முன்னேறி வருகிறது! பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் நடமாட்டம் காரணமாக சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டிருந்த காஷ்மீரத்திற்கு இப்போது 2 கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர் என மத்திய அரசு அறிவித்துள்ளது!
அதே பயங்கரவாதம் காரணமாக முடங்கியிருந்த திரைப்படங்களின் ஒளிப்பதிவு தொழிலும் இப்போது சுறுசுறுப்பாகியுள்ளது! 100 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளதாக அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன!
565 சமஸ்தானங்களாக இந்தியா ஆளப்பட்டு வந்த காலத்தில்தான் ஆங்கிலேயர்கள் இந்திய சுதந்திரத்தை அரிவித்தார்கள்! இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் அனைத்து சமஸ்தானங்களையும் ஒரே ஆளுமையின்கீழ் கொண்டுவந்தார்!
அந்த வேளையில் சர்தார் வல்லபாய் பட்டேலிடம் ஜவஹர்லால் நேரு கேட்டுக்கொண்டதால் பட்டேல் அவர்கள் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை மட்டும் ஒருங்கிணைக்காமல் விட்டுவிட்டார்!
காஷிபமுனிவரின் பூமியாகையால் காஷ்மீரி என அழைக்கப்பட்ட புண்ணிய பூமியை காப்பாற்றியது பாரதிய ஜனதா அரசு! ஹரிசிங் என்னும் ஹிந்து மன்னனால் 1947 வரை ஆளப்பட்டு வந்ததுதான் ஜம்முகாஷ்மீர் சமஸ்தானம்!
நேருவின் ஒரு பிழைகாரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டும் தாய் மடியில் இணைந்திருக்கிறது காஷ்மீர குழந்தை! இணைந்தது 2019 ஆகஸ்ட் 5, அதன் சட்ட பிணக்கு தீர்ந்தது 2023 டிசம்பர் 11. இது சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாள்! ”ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று!” – என்று காஷ்மீரத்து இந்தியர்கள் ஆனந்தம் கொண்டாடும் தருணம் இது! எனத் தெரிவித்துள்ளார்.