கிரிக்கெட் பந்துவீச்சில் ஐசிசி ‘ ஸ்டாப் கிளாக் ‘ என்ற ஒரு புதிய விதிமுறையை அமலுக்கு கொண்டுவந்துள்ளது.
அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் என்றே சொல்லலாம். இந்த கிரிக்கெட் பொறுத்தவரையில் ஒன்றல்ல இரண்டல்ல பல விதிமுறைகள் உள்ளது.
அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரர் ஏஞ்சலோ மத்தியூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்ததை பார்த்திருப்போம்.
அதேபோல் ஒரு புதிய விதிமுறையை கொண்டுவர போவதாக சில நாட்களுக்கு முன்பு ஐசிசி அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
கிரிக்கெட் போட்டி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடத்தப்படுவதற்கு ஐசிசி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. டி20 போட்டி என்றால் மூன்று முதல் 3:30 மணி நேரத்திற்குள்ளும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ஆறரை முதல் 7 மணி நேரத்தில் முடிக்கவும் ஐசிசி திட்டமிட்டு வருகிறது.
அதற்கான ஒரு புதிய விதிமுறையை ஐசிசி கொண்டுவந்துள்ளது. இதற்கு ஸ்டாப் க்ளாக் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது பந்து வீசும் அணி ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 வினாடிக்குள் தொடங்க வேண்டும்.
இவ்வாறு இரண்டு முறை 60 வினாடிக்குள் அடுத்த ஓவரை தொடங்க முடியவில்லை என்றால் இரண்டு முறை எச்சரிக்கை வழங்கப்படும். அதையும் மீறி மூன்றாவது முறையாக பந்து வீசும் அணி ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் 60 வினாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால் பேட்டிங் செய்யும் அணிக்கு ஐந்து ரன்கள் அபராதமாக வழங்கப்படும்.
இந்தப் புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. எனினும் இந்த விதியை முதல்முறையாக சோதிக்கும் வகையில் இங்கிலாந்தும், மேற்கிந்திய அணியும் மோதும் முதல் டி20 போட்டியில் அமலுக்கு வரவுள்ளது.
இந்தப் போட்டி இந்திய நேரப்படி 13 ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு தொடங்குகிறது. இதனால் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டிக்கு இந்த ஸ்டாப் லாக் முறை அமலுக்கு வராது. இந்த புதிய முறை இந்தியா அடுத்து விளையாடும் போட்டிக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதும் ஒரு ஓவர் முடிந்து மறு ஓவர் ஆரம்பிக்க பந்து வீசும் அணி அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எந்த பவுலரை பயன்படுத்த போவது, பில்டர்களை எப்படி நிறுத்துவது என்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதனை விரைவு படுத்த தான் இந்த விதியை ஐசிசி கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.