தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் விதிகளில் மாற்றம் கொண்டு வரும் தேர்தல் ஆணையர் நியமன மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதுவரை மத்திய அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையிலேயே தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமித்து வருகிறார். ஆனால், தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக சட்டம் இயற்றவும், அதுவரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கி குழு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் என்றும் கூறி உத்தரவிட்டனர்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் தேர்தல் ஆணையர் நியமன மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய சூழலில் அம்மசோதா மீதான விவாதத்தை நடத்த இயலவில்லை.
எனவே, நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில், தலைமை தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், பணி வரையறை, பணிக் காலம், தேர்தல் ஆணைய பணி செயல்முறை உள்ளிட்டவை தொடர்பான மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
புதிய மசோதாவில், பிரதமர், மக்களவை எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் நபர் என 3 பேர் அடங்கி குழு அமைக்கப்படும் என்றும், இக்குழுவின் பரிந்துரைகளின் படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வுக் குழு தேர்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த 3 பேர் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதிலாக பிரதமர் நியமனம் செய்யும் நபர் இடம் பெறுவதால், தேர்தல் ஆணையர் தேர்வில் அரசின் ஆதிக்கம் இருக்கும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதில் வெளிப்படை தன்மை இல்லாத சூழல் நிலவும் என்றும் கூறப்பட்டது.
எனவே, தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவை கண்டித்து எதிர்கட்சிகள் மாநிலங்களவையை விட்டு வெளிநடப்பு செய்தன. இதன் பிறகு, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையை ஒத்திவைத்தார்.