மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இடைக்கால பாண்டியர் கலை பாணியில் 900 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் பழமையான சிலை உள்ளதாக, அருகில் உள்ள கல்லூரிக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அக்கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் தாமரைக் கண்ணன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து கள ஆய்வாளர்கள் தாமரைக் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கூறியதாவது, கள்ளிக்குடி அருகே நல்லமநாயக்கன் பட்டியில் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் உடைய பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக விநாயகர் சிலை செதுக்கப்பட்டுள்ளது.
அகன்ற காதுகள், நீண்டு வளைந்த துதிக்கை மற்றும் 4 கரங்களுடன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வலது மேற்கரத்தில் மழுவும், இடது மேற்கரத்தில் பாசம் என்கிற ஆயுதத்துடனும், வலது முன் கரத்தில் உடைந்த தந்தத்தைப் பிடித்த படியும், இடது முன்கரத்தில் மோதகத்தை வைத்தபடியும், மோதகத்தைத் துதிக்கையினால் உண்டபடியும் சிற்பம் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.
சிற்பத்தின் வலது காலை குத்த வைத்தும், இடது காலை மடக்கியும், அகன்ற பெரிய வயிற்றுப் பகுதி அமர்ந்த திண்டின் மீது படும் படியும் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் வடிவமைப்பை வைத்து இடைக்கால பாண்டியர் கலை பாணியில் அமைந்த சிற்பம் எனக் கருதலாம் என்று கூறினர்.