இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இதில் டர்பனில் நேற்று முன்தினம் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது.
இதன் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, டாஸ் கூட போடாமல், ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி நேற்று இரவு செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் ரன் ஏதுமின்றி வெளியேறினர்.
அடுத்து வந்த திலக் வர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 56 ரன்களில் வெளியேறினார். இதை அடுத்து களமிறங்கிய அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 68 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு, 180 ரன்கள் எடுத்தபோது, மழை பெய்ததால், முதல் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனை அடுத்து டி.எல்.எஸ். முறைக்கு ஆட்டம் மாற்றப்பட்டு, 15 ஓவர்களில் 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின், தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ரீஜா ஹென்ரிக்ஸ் மற்றும் மேத்யூ பிரீட்கே ஆகியோர் களமிறங்கினர். பிரீட்கே 16 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மார்க்ரம் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹென்ரிக்சும் 49 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கிளாசென் 7 ரன்களிலும், டேவிட் மில்லர் 17 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், பெலுக்வாயோ 10 ரன்களும், டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 14 ரன்களும் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தனர்.
13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன்படி, 1-0 என்ற புள்ளிக்கணக்கில் தென்னாப்பிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.