மத்தியப் பிரதேச மாநில முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த மோகன் யாதவ் இன்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 163 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆனால், முதல்வர் யார் என்பதில் குழப்பம் நிலவியது. முதல்வர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
எனவே, புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்காக, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், கடந்த 11-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தனர்.
இக்கூட்டத்தில், பா.ஜ.க. சட்டமன்றக் குழுத் தலைவராக மோகன் யாதவ் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, மாநில ஆளுநர் மங்குபாய் படேலைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் இன்று பதவியேற்றார்.
அவருடன், ராஜேந்திர சுக்லா, ஜெக்தீஷ் தேவ்டா ஆகியோரும் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர். இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.