விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அமாவாசை தினத்தை யொட்டி, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், அதிகாலை அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரோஜா உள்ளிட்ட பலவகை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தர்பார் அலங்காரத்தில் காலை முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு பம்பை, மேளதாளம் முழங்க வடக்குவாசல் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். ஊஞ்சலில் இருந்த அங்காளம்மனுக்கு பூசாரிகள் தாலாட்டு பாடல் பாடினர். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேங்காயில் கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.