இந்தியா உலகக்கோப்பையில் அடைந்த தோல்வியைக் குறித்து முதல் முறையாக ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் லீக் சுற்றில் நடைபெற்ற 9 போட்டிகளில் 9 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது.
அரையிறுதி போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி இறுதிப்போட்டிக்கு 20 வருடங்களுக்குப் பிறகு தகுதி பெற்றது. அனைவரும் இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றி பெரும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இந்தியா அணி தோல்வியைத் தழுவியது.
இந்தியா தோல்வியடைந்த உடனே மைதானத்திலே சில வீரர்கள் அழுது தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா உலகக்கோப்பையைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்த நிலையில் தற்போது அணியின் தோல்வியைக் குறித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர், ” உலகக்கோப்பை தோல்வியிலிருந்து எப்படி கம்பேக் கொடுப்பது என்பதற்கான யோசனை என்னிடம் இல்லை. முதல் சில நாட்களில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சமயங்களில் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சுற்றியிருந்தது ஓரளவு ஆறுதலாக இருந்தது. இந்த தோல்வியை ஜீரணிப்பது எளிதல்ல. ஆனால் வாழ்க்கை நகர்வதால் நாமும் வாழ்க்கையுடன் நகர வேண்டும்.
உண்மையாகத் தோல்வியிலிருந்து நகர்வது மிகவும் கடினமாக இருக்கிறது. நான் 50 ஓவர் உலகக்கோப்பையைத் தான் அதிகமாகப் பார்த்து வளர்ந்தேன். 50 ஓவர் உலகக்கோப்பை என்பதுதான் நான் வெல்ல விரும்பிய மிகப்பெரிய பரிசு. இதற்காகக் கடந்த பல வருடங்களாக உழைத்தும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.
அதனால் இப்போது அதை நினைத்தாலும் ஏமாற்றமும் எரிச்சலும் வருகிறது. ஏனெனில் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் வெற்றிக்காகச் செய்தோம். ஒருவேளை என்ன தவறு நடந்தது என்று யாராவது கேட்டால் 10 தொடர்ச்சியான வெற்றிகள் பெற்றதை தான் நான் சொல்வேன்” என்று கூறினார்.