நாளை, இந்த ஆண்டின் கடைசி முகூர்த்த நாள் என்பதால், மதுரையில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூ சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் பூக்கள் அனைத்தும், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மலர் சந்தைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டின் கடைசி முகூர்த்தம் நாளை நடைபெறுகிறது. இதனால், நேற்று ரூ.1,500 -க்கு விற்பனையான மல்லிகை பூவின் விலை இன்று ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் முல்லை பூ நேற்று ரூ.500 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.1,000 -க்கு விற்பனையானது.
கனகாம்பரம் மற்றும் பிச்சிப் பூ நேற்று ரூ.400 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.700 -க்கு விற்பனையானது. செண்டுமல்லி ரூ.500 -க்கும், பன்னீர் ரோஸ் ரூ.500-க்கும், சம்மங்கி பூ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பூக்கள் விலை உயர்வால், அதனை வாங்க முடியாமல் பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.