அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது என்று ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், வரலாற்றை நன்கு அறிந்தவர் அமித்ஷா என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்திருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத் தொடரை வரும் 22-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தொடரில் தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.
இந்த சூழலில், கடந்த 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2023 ஆகிய இரு மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது.
இதையடுத்து, விவாதத்தின் மீது கடந்த 6-ம் தேதி பதிலளித்துப் பேசிய அமித்ஷா, “1947-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் நம் நாட்டு இராணுவம் வெற்றிப் பாதையில் சென்றுகொண்டிருந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை அடைந்தபோது, நேரு திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
இதனால்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. 3 நாட்கள் கழித்து போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் நம்மிடம் வந்திருக்கும். நீண்டகாலத்துக்குப் பிறகு, ‘போர் நிறுத்தம் அறிவித்தது தவறுதான்’ என்று நேருவே தெரிவித்தார். அது தவறு அல்ல வரலாற்றுப் பிழை.
அதேபோல, மற்றொரு பிழை, காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றது. நமது பெரும்பகுதியை நாம் இழந்துவிட்டோம். இது வரலாற்று பிழை” என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன.
இதனிடையே, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரியும் என்று எதிர்பார்க்க முடியாது. வரலாறை மாற்றி எழுதும் பழக்கம் மட்டுமே அவருக்கு உண்டு” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கும் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர், “370-வது சட்டப்பிரிவு ஏன் உருவாக்கப்பட்டது, எதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். 370-வது பிரிவு தற்காலிகமானது என்பதுதான் வரலாற்றின் உண்மை. அந்த வரலாற்றை நன்கு அறிந்தவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. நாம் அனைவரும் அவரிடமிருந்து வரலாற்றை நிறைய கற்றுக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.