இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற, சுமார் 65 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.
இராமேஸ்வரத்திலிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படுகிறது. அதேபோல், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவைகள் கடத்தி வரப்படுகிறது.
இதனைத் தடுப்பதற்காக இந்தியக் கடலோர காவல் படையினர் அதிநவீன படகுகள் மூலம் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடல் பகுதியில் இருந்து, இலங்கைக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தப்படுவதாக, இந்திய கடலோர காவல் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நாட்டுப்படகில் இருந்தவர்கள் ரோந்து படகைப் பார்த்ததும், படகை வேகமாக செலுத்தியுள்ளனர். இதை அடுத்து, கடலோர காவல் படையினர் அந்த படகை விரட்டிச்சென்றனர்.
கடத்தல்காரர்கள் படகை வேதாளை பகுதியில் நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். கடலோர காவல் படையினர் அந்த படகில் ஏறி சென்று சோதனை செய்தனர். அதில், அட்டை பெட்டிகளில் ஏராளமான மாத்திரைகள் அடுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. சுமார் 65 ஆயிரம் மாத்திரைகள் இருந்தன. அவை வலி நிவாரணியாக பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து பல இலட்ச ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள், நாட்டு படகு பறிமுதல் செய்யப்பட்டது. இவை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. தப்பியோடிய கடத்தல்காரர்களை, இந்திய கடலோரக் காவல் படையினர் மற்றும் உளவு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.