வெளிநாட்டினர் திருட்டுத்தனமாக ஊடுருவுவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநட்டினரின் தரவுகளை துல்லியமாக சேகரிப்பது சாத்தியமில்லை. எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அஸ்ஸாம் மாநிலத்துக்குள் நுழைந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கத்தில், நமது குடியுரிமைச் சட்டத்தில் 6ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி, 1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 25-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், நமது நாட்டிற்குள் நுழைந்த வங்கதேசத்தினருக்கு இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த குடியுரிமைச் சட்டத்தின் 6ஏ பிரிவின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த மனு கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 1971 மார்ச் 25-ம் தேதிக்குப் பிறகு அஸ்ஸாம் மாநிலம் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளில் குடியேறியவர்களின் தரவுகளை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின்படி, 1966 – 1971 காலக்கட்டத்தில் 32,381 பேர் வெளிநாட்டினராக கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்களில் 17,861 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அஸ்ஸாம் மட்டுமின்றி நாட்டின் பிறபகுதிகளில் குடியேறிய வெளிநாட்டினரின் தரவுகளை துல்லியமாகக் கண்டறிவது கடினமான காரியம். காரணம், அவர்கள் திருட்டுத்தனமாக ஊடுருவியவர்கள். எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்யும் கடினமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.