திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவைத் தெளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மிக்ஜாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மின்சாரம், இணைய சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், உணவு, தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இதனை அடுத்து தண்ணீர் வடிந்து, தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் இருந்த குப்பைகளை அகற்றி, ப்ளீச்சிங் பவுடர் தூவும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர். இதனால், கொசு தொல்லைக் குறைந்து பூரான், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வராது. மேலும், கிருமிகள் வீடுகளை அண்டாது.
அந்த வகையில், செங்குன்றம் டாக்டர் வைத்தீஸ்வரன் தெரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகளில் தூவப்பட்ட ப்ளீச்சிங் பவுடர் மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து, அதை கையில் எடுத்து பொதுமக்கள் சோதித்துப் பார்த்ததில், அது ப்ளீச்சிங் பவுடர் இல்லை, மைதா மாவு என்பது தெரியவந்தது.
மேலும், தூய்மை பணியாளர்கள் கொண்டு வந்த மூட்டையைச் சோதித்த போது, பிஸ்கட், ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மைதா மாவு இருந்தது. இதுகுறித்து தூய்மை பணியாளர்களிடம் விசாரித்த போது, பேரூராட்சி அதிகாரிகள் கொடுத்ததைத் தான் தூவி வருவதாக தெரிவித்தனர். பேரூராட்சி அதிகாரிகளின் செயல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.