கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 55 இலட்சம் மதிப்பிலான, 907 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சிலர் தங்கள் உடைமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருகின்றனர். இதனை கண்டறிந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் கெம்பேகவுடா விமான நிலையம் வந்தது. இதனை அடுத்து பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது குடகு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வழக்கத்திற்கு மாறாக சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கவனித்தனர்.
இதனை அடுத்து அவரைத் தனியாக அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவரது பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டை ஆய்வு செய்ததில், இடுப்புப் பகுதியில் தங்கத்தைப் பசையாக உருவாக்கி, அதன் மேல் ஜீன்ஸ் துணியை வைத்து தைத்து கடத்தி கொண்டு வந்துள்ளதைக் கண்டுபிடித்தனர்.
இதை அடுத்து அவரிடம் இருந்து சுமார் 55 இலட்சம் மதிப்பிலான, 907 கிராம் தங்க பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.