இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இன்று நடந்த சம்பவங்களுக்குக் காரணமான குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இன்று நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன.
நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்த பொழுதே பார்வையாளர் மாடத்திலிருந்து 2 பேர் அவைக்குள்ளே எட்டிக் குதித்துக் கோசம் எழுப்பி, வண்ணப் புகைக்குண்டை வீசியிருக்கிறார்கள், அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் 2 பேர் முழக்கமிட்டிருக்கிறார்கள். பல அடுக்குப் பாதுகாப்புக் கொண்ட இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் அவர்களால் எப்படிச் செல்ல முடிந்தது? அவர்களுடைய நோக்கம் என்ன? என்பது குறித்துப் புலனாய்வு அமைப்புகள் மூலமாக விசாரிக்க வேண்டும்.
கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதம் தாங்கிய குழு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய அதே தினத்தன்று இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது, இச்சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலாகப் பார்க்காமல், இந்திய ஜனநாயகத்தின் மீது நடந்த தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.
பல அடுக்கு பாதுகாப்பையும் மீறி எப்படி அவர்கள் உள்ளே சென்றார்கள்? பார்வையாளர்கள் மாடத்திலிருந்து எப்படி குதித்தார்கள்? வண்ணப் புகை குண்டை எப்படி உள்ளே எடுத்துச் சென்றார்கள்? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
எனினும் உண்மை நிலை கண்டறியப்பட்டு நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும், நாடாளுமன்ற வளாகப் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவையும் கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.