QR குறியீடு மோசடி குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகெங்கிலும் தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அனைவரின் பர்சில் பணமிருந்த காலமாறி தற்போது அனைவரின் தொலைப்பேசியில் தான் பணம் உள்ளது.
இப்படி எந்த அளவிற்குத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளதோ அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிகளும் நடந்துவருகிறது. ஓடிபி மோசடி, போலி எஸ்.எம்.எஸ் மோசடி, QR குறியீடு மோசடி எனப் பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் தற்போது பலரும் பணம் செலுத்துவதற்கும், உணவு மெனுக்களை ஸ்கேன் செய்வதற்கும் அல்லது மக்களுக்கான விவரங்களைப் பெறுவதற்கும் QR குறியீடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த QR குறியீட்டை பயன்படுத்தி பலரும் பண மோசடி செய்துவருகின்றனர். இந்த QR குறியீடு மோசடி இப்போது உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் தங்கள் நாட்டிலுள்ள மக்களுக்கு இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) QR குறியீடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், சைபர் கிரிமினல்கள் எப்படி மக்களை ஏமாற்றுகின்றனர் என்பது குறித்தும் பேசியுள்ளது.
மக்களின் தகவல்களை திருடுவதற்கு சைபர் குற்றவாளிகள் QR குறியீடுகளுக்குள் ஆபத்தான இணையதள இணைப்புகளை மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல் பார்க்கிங் மீட்டர்களில் QR குறியீடுகளைப் பயன்படுத்துவதையும் அமெரிக்கா அரசாங்கம் சுட்டிக்காட்டியது, இது பயனர்களிடமிருந்து தரவை திருட உதவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெலிவரி ஏஜெண்டு வடிவிலும் QR மோசடி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
டெலிவரி செய்வதில் சிக்கல் இருப்பதாகக் கூறி, வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு விவரங்களைப் பகிரும்படி கேட்டுக்கொள்கிறார்கள், இதற்காக அவர்கள் QR குறியீட்டைப் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது அதில் பணத்தைத் திருடும் ஆபத்தான இணைப்புகள் இருக்கலாம்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்கலாம். இதே போல் உங்கள் வங்கிக் கணக்கில் ஏதேனும் சிக்கல் இருப்பதாகக் கூறியும் இந்த மோசடியில் ஈடுபடலாம் என அமெரிக்கா அரசாங்கம் எச்சரிக்கை செய்துள்ளது.