நாடாளுமன்றத்தில் சதித் திட்டத்தை அரங்கேறியவர்கள், தாக்குதலுக்கு முன்பு பக்காவாக உளவு பார்த்ததும், ஒரு மாதம் முன்பு நாடாளுமன்றத்தில் ஒத்திகை பார்த்ததும் தெரியவந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 இளைஞர்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் ஒரு பெண் உட்பட 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இவர்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்து டெல்லி போலீஸாரிடம் ஒப்படைந்தனர். இவர்கள் 4 பேர் மீது உபா சட்டம் பாய்ந்திருக்கும் நிலையில், அவர்களிடம் நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையில், தாக்குதலுக்கு முன்பு நாடாளுமன்றத்திற்கு வந்து பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து உளவு பார்த்தது, 2001-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதல் நடந்த 22-ம் ஆண்டு நினைவு தினத்தில் இத்தாக்குதல் திட்டத்தை அரங்கேற்ற திட்டமிட்டது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது, உத்தரப் பிரதேசத்தின் லக்னெளவைச் சேர்ந்த சாகர் சர்மா, கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த டி.மனோரஞ்சன், ஹரியானாவைச் சேர்ந்த நீலம் தேவி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமோல் ஷிண்டே, குருகிராம் நகரில் வசித்து வரும் விஷால், லலித் ஆகிய 6 பேரும் முகநூல் மூலம் நண்பர்களாகி இருக்கிறார்கள்.
“பகத்சிங் பேன் கிளப்” என்ற இணையதளம் மூலம் ஒருங்கிணைந்த இவர்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மைசூரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அப்போது, 6 பேரும் ஒரே மனநிலையில் இருப்பது தெரியவந்தது. அரசுக்கு எதிராக அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று 6 பேரும் திட்டமிட்டிருக்கின்றனர்.
இதற்காக அடிக்கடி டெல்லியில் கூடி பேசியிருக்கிறார்கள். அப்போதுதான், நாடாளுமன்றத் தாக்குதல் தினமான டிசம்பர் 13-ம் தேதி மீண்டும் ஒரு புதுமையான தாக்குதலை அரங்கேற்ற வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். எனவே, 6 பேரும் அடிக்கடி நாடாளுமன்றத்துக்கு வந்து உளவு பார்த்திருக்கிறார்கள்.
இவர்களில் சாகர் சர்மா மட்டும் கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்துக்கு உள்ளே நுழைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார். எந்தெந்த இடங்களில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்பதை நோட்டம் விட்டிருக்கிறார்.
அப்போது, நான்கு அடுக்கு பாதுகாப்பில் உடல் முழுவதையும் சோதனை செய்தாலும், காலில் அணிந்து செல்லும் ஷூவை கழற்றி ஆய்வு செய்யவில்லை என்பது தெரியவந்தது. எனவே, தாக்குதல் நடத்தும் பொருளை ஷூவுக்குள் மறைத்து எடுத்துச் செல்ல தீர்மானித்திருக்கிறார்கள்.
அதன்படி, 1,200 ரூபாய்க்கு புகைக் குண்டுகளை வாங்கி ஷூவுக்குள் மறைத்து எடுத்து வந்திருக்கிறார்கள். மேலும், தாக்குதலுக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் இவர்கள் நாடாளுமன்றப் பகுதியில் ஒத்திகையும் நடத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் நாடாளுமன்றத் தாக்குதலை நன்கு திட்டமிட்டு நடத்தி இருப்பது தெரியவந்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, இவர்கள் மட்டும்தான் சதித் திட்டத்தை செய்தார்களா அல்லது இவர்கள் ஒன்றிணைந்த முகநூல் குழுவில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.