திருப்பதியில் 2022-23 -ம் நிதி ஆண்டில் தேவஸ்தானத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.4,385 கோடியே 25 லட்சமாக நிலையில், 2023- 24 நிதி ஆண்டில் தேவஸ்தானத்தின் வருமானம் ரூ. 4,411 கோடியே 65 லட்சமாக இருக்கும் என்று தேவஸ்தான பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், 2023-24 நிதி ஆண்டில், உண்டியல் காணிக்கையாக ரூ. 1,591 கோடியும், பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டியாக ரூ. 990 கோடியும், பிரசாத விற்பனை மூலம் ரூ. 500 கோடியும், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 330 கோடியும், கட்டண சேவை டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 140 கோடியும், அறைகள் மற்றும் கல்யாண மண்டபங்களின் வாடகை வருவாய் மூலம் ரூ. 129 கோடியும் வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு பட்ஜெட்டில் 1 சதவீதம் திருப்பதி மாநகராட்சி வளர்ச்சிக்கு செலவிட அறங்காவலர் குழு முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருப்பதி மாநகராட்சியில் தூய்மை, சாலைப் பணிகளுக்குக் கோவில் நிதியை பயன்படுத்துவது சட்ட விரோதம் என்றும், திருப்பதி தேவஸ்தானத்தின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டது.