உலகில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து தங்கள் நாடுகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, ஜப்பான், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, அடுத்த தலைமுறை போர் விமானத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
ஜப்பான், பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டு சேர்ந்து புதிய ரக போர் விமானத்தைத் தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. மற்ற நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து தங்கள் நாட்டினைப் பாதுகாத்து கொள்வதற்காக இந்த கூட்டு முயற்சியை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.
மிட்சுபிஷி எஃப்-எக்ஸ் (Mitsubishi F-X) என அழைக்கப்படும் இந்த ஜெட் விமானத்தின் தயாரிப்பு மூன்று நாடுகளின் மேற்பார்வையில் நடைபெறும். இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது.
இந்த போர் விமானம் 2035-ஆம் ஆண்டுக்குள் தயாரிக்கப்படும். இதற்கு ஜப்பான் தலைமையேற்றுள்ள நிலையில், தலைமைப் பொறுப்பு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும்.
இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் மினாரு கிஷாரா கூறியதாவது, நாட்டின் வான்வழி பாதுகாப்பை உறுதி செய்ய அதிக திறன்கொண்ட போர் விமானங்களைத் தயாரிப்பது தவிர்க்க முடியாதது என்று கூறினார்.
மேலும், ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் வேளையில் இந்த புதிய போர் விமானத்தைத் தயாரிப்பது அவசியம் ஆகும். ஒரு நாடு தனியாக ஒரு போர் விமானத்தை உருவாக்க தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவிகள் தேவைப்படும். ஆனால், மூன்று நாடுகளும் இணைந்து இந்த போர் விமானத்தை உருவாக்குவது அந்த வகையிலான நெருக்கடிகளைக் குறைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.