பாகிஸ்தான் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் பல்வேறு பொருளாதார சிக்கல்களில் சிக்கி தவித்து வருவதால், விமான நிலையத்தின் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்த பாகிஸ்தான், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் நிதிச் சிக்கலில் இருக்கிறது. சொந்த நாட்டு மக்களுக்கு உணவு வழங்கக்கூட முடியாமல் திணறி வருகிறது. இதனால், பாகிஸ்தான் உலக நாடுகளிடமும், நிதித் தேவைக்கு உலக வங்கியிடமும் கையேந்தி நிற்கிறது. அந்நாட்டில் உள்ள நிறுவனங்கள் பலவும் பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கின்றன.
அந்த வகையில், பாகிஸ்தானின் சர்வதேச விமான நிலைய நிர்வாகமும் பொருளாதார சிக்கலில் உள்ளது. 7 ஆயிரம் ஊழியர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான ஊதியம் வழங்கவில்லை. இந்த பிரச்னைக்கு விமான நிலையத்தில் நடந்துவரும் எரிபொருள் பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க விமான நிலைய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், விமான நிலைய நிர்வாகம் வங்கிகளிடம் கடன் கேட்டுள்ளது.
அடுத்த மாதத்திற்குள் நிலுவை ஊதியத்தொகை வழங்கவில்லை என்றால், போராட்டங்கள் நடத்தப்படும் என தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.