29.21 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளமான இ-ஷ்ரம் போர்ட்டலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2021, ஆகஸ்ட் 26 அன்று அறிமுகப்படுத்தியது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்கள் சுய அறிவிப்பு அடிப்படையில் போர்ட்டலில் தன்னைப் பதிவு செய்ய இது அனுமதிக்கிறது. ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதே இ-ஷ்ரம் போர்ட்டலின் முக்கிய நோக்கமாகும்.
அத்தகைய தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களை வழங்கவும் இது உதவுகிறது. 07.12.2023 நிலவரப்படி, 29.21 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர்.