அயோத்தி இராமர் கோவிலின் முக்கிய சிலையை இஸ்லாமியர்கள் செய்வதாக வெளியான செய்தி தவறானது என்பது தெரியவந்துள்ளது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கோவிலில் நிறுவப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை ஒரு இஸ்லாமிய சிற்பி மற்றும் அவரது மகன் செய்வதாக செய்திகள் வெளியானது. வங்காளத்தைச் சேர்ந்த முகமது ஜமாலுதீன் மற்றும் அவரது மகன் பிட்டு ஆகிய இருவரும் சிலையை வடிவமைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி போலியானது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
உண்மையில், முகமது ஜமாலுதீனும் அவரது மகன் பிட்டுவும் கோயில் வளாகத்தை அலங்கரிக்கும் சில சிலைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தியின் முக்கிய சந்திப்புகளில் ராமர் சிலைகள் வைக்கப்படும் என்றும், அதில் சில சிலைகளை ஜமாலுதீனும் அவரது மகனும் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அயோத்தியில் மூன்று குழந்தை ராமர் சிலைகள் மூன்று தனித்தனி கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவைச் சேர்ந்த கணேஷ் பட் மற்றும் அருண் யோகிராஜ் மற்றும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சத்யநாராயண் பாண்டே ஆகிய 3 சிற்பிகள் சிலைகளை உருவாக்கி வருவதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
அவற்றில் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு சன்னதியில் வைக்கப்படும், அதன் பிறகு பிரான் பிரதிஷ்டை சடங்குகள் அர்ச்சகர்களால் நடத்தப்படும்.