அடுத்த மாதம் மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகை தரவிருக்கிறது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.
இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காக, சீன உளவுக் கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு வந்து செல்கின்றன. இவை அனைத்துமே உயர் தொழில்நுட்பம் கொண்ட உளவுக் கப்பல்களாகும். ஆகவே, இக்கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே வருவதாகக் குற்றம்சாட்டி, சீனக் கப்பல்கள் வருகைக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனாலும், சீன உளவுக் கப்பல்களின் வருகை தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு சீனாவின் உளவுக் கப்பலான “யுவான் வாங் 5” இலங்கைக்கு வந்து, ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அதேபோல, ‘ஷி யான்-6’ என்கிற சீனக் கப்பல் கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்து, இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ‘ஷி யான்-6’ கப்பல் தனது ஆய்வுப் பணியை முடித்து விட்டு, கடந்த 2-ம் தேதி சிங்கப்பூர் சென்றது.
இந்த நிலையில், ஜனவரி மாதம் மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் இந்திய கடல் பகுதிக்கு வருகிறது. இக்கப்பல் ஜனவரி மாதம் 5-ம் தேதி முதல் மே மாதம் வரை 5-ம் தேதி வரை 3 மாதங்கள் இந்தியப் பெருங்கடலின் தெற்கு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்த உளவுக் கப்பல் 4,813 டன் எடை கொண்டது. இக்கப்பலில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வு கருவிகள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் இடம்பெற்று உள்ளன.
இக்கப்பலை இலங்கை மற்றும் மாலத்தீவு துறைமுகங்களில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே, மேற்கண்ட 2 நாடுகளிடமும் சீனா அனுமதி கேட்டிருக்கிறது. அதாவது, இலங்கையை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும், மாலத்தீவு அரசு தற்போது சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாலும் உளவுக் கப்பலை அனுப்பி இந்தியாவை உளவு பார்க்க 2 நாடுகளையும் சீனா பயன்படுத்துகிறது.
இதையடுத்து, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய 2 நாடுகளையும் மத்திய அரசு தொடர்பு கொண்டு, சீனக் கப்பலை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. எனினும், சீனாவின் உளவு கப்பலான ‘ஷியாங் யாங் ஹாங் 03’ தென் சீனக் கடல் பகுதியில் ஷியாமென் கடற்கரையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறது. 2 நாடுகளிடமும் அனுமதி பெற்ற பிறகு, அக்கப்பல் மலாக்கா வழியாக மாலத் தீவு மற்றும் இலங்கைக்கு பயணிக்கும் என்று கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, எதிர்கால கடற்படை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, சீனா ஏற்கெனவே கம்போடியா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துறைமுகங்களை கையகப்படுத்தி இருக்கிறது. மேலும், இத்துறைமுகங்களில் முதலீடும் செய்திருக்கிறது. அந்த வகையில், இந்தியப் பெருங்கடல் முழுவதிலும் சீனா தனது தடத்தை விரிவுபடுத்த முயல்வதால், அதை தடுக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.