தேசத்தை கட்டமைத்ததில் கேந்திரிய வித்யாலயா முக்கியப் பங்கு வகித்தது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
கேந்திரிய வித்யாலயாவின் வைர விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அப்பள்ளியின் மாணவர்கள், ஊழியர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “கேந்திரிய வித்யாலயாவின் வைரவிழாவையொட்டி, அக்குடும்பத்தின் அனைத்து மாணவர்கள், ஊழியர்கள், துணை ஊழியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்! இந்த மதிப்பிற்குரிய கல்விச் சமூகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் போற்றுவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும்.
பல ஆண்டுகளாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதன் மூலம் நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் கேந்திரிய வித்யாலயாக்களின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது” என்று தெரிவித்திருக்கிறார்.
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (மத்திய பள்ளி அமைப்பு) என்பது இந்தியாவில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளின் அமைப்பாகும். இது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. ஏப்ரல் 2023 நிலவரப்படி, இது இந்தியாவில் மொத்தம் 1,253 பள்ளிகளையும், காத்மாண்டு, மாஸ்கோ மற்றும் தெஹ்ரானில் 3 பள்ளிகளையும் கொண்டிருக்கிறது.
இது உலகின் மிகப்பெரிய பள்ளிகளின் சங்கிலிகளில் ஒன்றாகும். மேலும், இது இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிகளின் சங்கிலியாகும். இது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். மேலும், இதன் அனைத்து பள்ளிகளும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் (CBSE) இணைக்கப்பட்டுள்ளன.