நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பான மஹுவா மொய்த்ராவின் வழக்கு ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தனியிடம் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி, கடந்த நவம்பர் 9-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதன்படி, இவ்வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மஹுவா மொய்த்ரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். முதல்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாளை முதல் உச்ச நீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.