காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச அளவில் நிர்பந்தம் அதிகரித்து வரும் நிலையில், போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேல் நகருக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. 70 நாட்களை நெருங்கும் இப்போரில், காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. சுமார் 20,000 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். 50,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். தண்ணீர், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. மேலும், ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்திருக்கிறது.
ஆனால், சர்வதேச அழுத்தத்தையும் மீறி, போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள விடியோவில் பிரதமர் நெதன்யாகு பேசுகையில், “ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கான இந்தப் போர் இறுதி வரை தொடரும். இதை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
போரில் நமக்கு ஏற்படும் இழப்புகள் காரணமாக மட்டுமின்றி, சர்வதேச நிர்பந்தங்கள் காரணமாகவும் காஸாவில் சண்டை நிறுத்தப்படாது. அந்தப் போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இறுதி வெற்றி கிடைக்கும்வரை போர் தொடரும். அதைவிடக் குறைவான எந்தத் தீர்வும் ஏற்கப்படாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.