எத்தனை கோவில்களில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களை பாதுகாப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இது தொடர்பான வழக்கில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தாதது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது, எத்தனை கோவில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 1824 கோயில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 263 கோயில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிச.,22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.