வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 7 -ம் தேதி வியாழன் இரவு சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது, பீளமேடு – வடகோவை இரயில் நிலையம் இடையே , மர்ம நபர்கள் சிலர் வந்தே பாரத் இரயில் மீது கற்களை வீசியுள்ளனர். இதில், இரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
இது குறித்து, இரயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கோவை பீளமேடு பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, இரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் 2 பேர் சுற்றி திரிந்தனர். அந்த 2 பேரை மடக்கி பிடித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த 7 -ம் தேதி அன்று வந்தே பாரத் இரயில் மீது கல் வீசியது இவர்கள் தான் என தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர். இதில், ஒருவர் பெயர் சரவணன் (வயது28) மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் பெயர் ஜெகதீஷ் (வயது23) இவர் கோவையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.