தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் 19-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக்கவும், மீன்பிடி சாதனங்களைப் பத்திரமாக வைக்கவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
















